2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் மொத்தம் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தார்கள். 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தும் அவரது முக்கியத் தளபதிகள் குறித்தும் பல்வேறுபட்ட செய்திகள் மாறி மாறி வெளியிடப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உள்ளங்களைச் சோர்வடைய வைத்தது.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் தங்கள் இன்னுயிரை ஈந்தும், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தும், அனுபவித்த துயரங்களும், துன்பங்களும், தியாகங்களும் ஈடு இணையற்றவை. ஆனால் இந்தத் தியாகங்கள் வீணாகிவிடுமோ, தமிழீழத் தாயகக் கனவு சிதைத்துவிடுமோ என்ற கவலை தமிழர்களின் உள்ளங்களைக் குடைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள வதை முகாம்களில் சிக்கிச் சீரழியும் தமிழர்களின் நிலை குறித்து உலகத் தமிழர்கள் சொல்லமுடியாத வேதனை அடைந்திருக்கிறார்கள்.
மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய-சிங்கள அரசுகளின் உளவுத் துறைகள் தமிழர்களின் உளவியலைச் சிதைக்கும் வகையில் பொய்யான செய்திகளைத் தொடர்ந்து பரப்புவதில் ஈடுபட்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை கொல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்தச் செய்திகளை யெல்லாம் பொய்யாக்கி மீண்டும் மீண்டும் அவர் உயிர்த்தெழுந்து நெடிதுயர்ந்து நிற்பதோடு சகப் போராளிகளையும் மக்களையும் பேரெழுச்சி பெறவைக்கிறார்.
35 ஆண்டுகளுக்கு முன்பு தனது 17ஆம் வயதில் ஒரே ஒரு கைத் துப்பாக்கியுடனும் விரல்விட்டு எண்ணக் கூடிய சக தோழர்களுடனும் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள், டோரா படகுகள், போர் விமானங்கள் போன்ற நவீன ஆயுதங்களுடன் சிங்கள இராணுவம் வலிமை மிக்கதாக இருந்தது. ஆனாலும் பிரபாகரன் கொரில்லா நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டுப்கோப்பு நிறைந்த இயக்கமாக விடுதலைப்புலிகளை உருவாக்கி சிங்கள இராணுவத்துடன் இடைவிடாது மோதி அவர்களை அச்சமடைய வைத்து முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க வைத்தார். திடீர் திடீர் கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் சிங்கள வீரர்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில் அரசியல் ரீதியாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி விடுதலைப் போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றினார். புலிகளின் தியாகமும் வீரமும் நிறைந்த நடவடிக்கைளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தார்கள். அதன் விளைவாக அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவவும் தோள் கொடுத்து துணை நிற்கவும் முன்வந்தார்கள்.
1970 களில் விடுதலைப் புலிகளை அடக்குவதற்காக அதிபர் ஜெயவர்த்தனா தனது மருமகனான பிரிகேடியர் வீரதுங்காவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்து 6 மாத காலத்தில் பயங்கர வாதிகளை அடக்கிவரும்படி ஆணையிட்டார். அவருக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். வட மாநிலம் முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டது. மிகக் கொடூரமான முறையில் இராணுவம் மக்களை, குறிப்பாக இளைஞர்களை வேட்டையாடியது. ஆனாலும் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தனவே தவிர குறையவில்லை.
இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பெருமளவில் ஒரு படையெடுப்பை நடத்தி சிங்கள இராணுவம் வடமராச்சி பகுதியை ஆக்கிரமித்தது. இராணுவ பலம் வாய்ந்த எதிரியை முறியடிக்க மில்லர் என்ற கரும்புலியை பிரபாகரன் உருவாக்கி நெல்லியடி இராணுவ முகாமை அடியோடு தகர்த்தார். நூற்றுக்கணக்கான வீரர்கள் மாண்டு மடிந்த நிகழ்ச்சியைக் கண்டு சிங்கள அரசு திகைத்தது. கரும்புலிகளாக இளைஞர்கள் மாறி மரண பயம் இல்லாமல் எதிரியைத் தாக்கி நடுநடுங்க வைத்தார்கள். புலிகளை ஒழித்துவிட முடியவில்லை
புலிகள் வலிமை பெற்று வருவதை உணர்ந்த சிங்கள அரசு இந்தியாவுடன் சேர்ந்து உடன்பாடு என்ற பெயரால் சதித்திட்டம் வகுத்து இந்தியப் படைகளைக் கொண்டுவந்து இறக்கியது. அமைதிப்படை என்ற பெயரால் வந்த படை விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அடியோடு ஒடுக்குவதில் முனைந்து ஈடு பட்டது. தமிழீழப் பகுதி முழுவதிலும் முக்கிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் 600க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்களை இந்தியப் படை அமைத்தது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மிக நவீன ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனர். புலிகளின் நிலைகள் மீது அலை அலையாகப் படையெடுப்பு கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய இராணுவத்தின் சிறப்பு இராணுவப் பிரிவுகளையும், மலைக் காடுகளில் போராடும் பயிற்சி பெற்ற அதிரடிப் படை அணிகளையும் புலிகளுக்கு எதிராக ஏவிவிட்டது.
இந்திய-இலங்கை உடன் பாட்டினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த திலீபனின் போராட்டம் இந்தியாவைப் பற்றிய ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை சிதறடித்தது. தொடர்ந்து புலேந்திரன், குமரப்பா உட்பட 12 முக்கிய புலிகள் இந்தியாவின் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட நிகழ்ச்சியும் இந்தியா பற்றிய மாய வலையை முற்றிலுமாக அறுத்தெறிந்தன.
இந்திய இராணுவம் சிங்கள இராணுவத்தை மிஞ்சிய அளவில் தமிழர்களைப் படுகொலை செய்தது. யாழ்ப்பாணப் போரில் மட்டும் 2000 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட னர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடு கள் தரைமட்டமாக்கப்பட்டன. நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் வன் முறைக்கு ஆளாயினர். யாழ் மருத்துவ மனையில் நடத்தப்பட்ட படுகொலை காலத்தால் அழியாத அவமானக் கறையை இந்தியாவின் மீது படிய வைத்தது.
இந்திய இராணுவ வரலாற்றில் அது சந்தித்த போர் நெருக்கடிகளில் புலிகளுடன் நடத்திய போரே நீண்ட காலப் போராக நீடித்தது. இரண்டாண்டு வரை நீடித்த இந்தப் போரில் இந்திய இராணுவம் தனது நோக்கங்கள் எதையுமே பூர்த்தி செய்ய முடியவில்லை. புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்பது, புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது. புலிகளிடமிருந்து மக்களை அன்னியப்படுத்துவது ஆகிய அதனுடைய நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. மாறாக கொரில்லாப் படை என்ற நிலையிலிருந்து புலிகள் மரபு வழிப் படையாக பிற்காலத்தில் உருவாவதற்கு இந்தப் போர் உதவியது. ஆயுதங்கள் இல்லாமல் தத்தளித்த புலிகள் இந்திய இராணுவ ஆயுதங்களைப் பலவகையிலும் ஏராளமாகக் கவர்ந்தார் கள். நகர்ப்புறக் கொரில்லாக்களாக இருந்த புலிகள் வன்னிக் காடுகளுக்கு தங்கள் தளங்களை மாற்றினார்கள். அதுவே அவர்களுக்கு பெரும் பாது காப்பாகவும் வலிமையான அரணாகவும் அமைந்தது. புலிகளை அழித்து விட முடியவில்லை
இந்திய இராணுவத்துடனான போரில் 654 புலிகள் மாண்டனர். மற்றும் கணிசமான பகுதியினர் சிறைப்பிடிக்கப்பட்டு அல்லது சிதறி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். பிரபாகரனுடன் வெறும் 50 பேர் மட்டுமே இருந்தார்கள் என்பதும் அவர்களைக் கொண்டே கொரில்லாப் போரில் நவீன உத்திகளைக் கையாண்டு இந்தியப் படையை அவர் திணறடித்தார் என்பதும் வரலாறு. ஒருபுறம் இந்திய இராணுவத்துடன் போராடிக்கொண்டு மறுபுறம் தனது படையணிக்கு ஏராளமான இளைஞர் களை ஈர்த்து வன்னிக் காட்டில் அவர் களுக்குப் பயிற்சியளித்து வலிமை வாய்ந்த ஒரு படையை மீண்டும் அவர் கட்டியெழுப்பினார்.
வியட்நாமில் அமெரிக்க-பிரெஞ் சுப் படைகளை எதிர்த்துப் போராடிய ஹோசிமின் அவர்களுக்கு செஞ்சீனமும், சோவியத் ஒன்றியமும் துணை நின்றதால் அன்னியப்படைகளை வெளியேற்ற முடிந்தது.
ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்துப் போராடிய கொரில்லா இயக்கங்களுக்கு அமெரிக் காவும், பாகிஸ்தானும் உதவியதால் சோவியத் படைகளை வெளியேற்ற முடிந்தது.
ஆனால் இந்தியப் படைகளை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு உதவ உலகில் எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. ஆனாலும் தனியே மனஉறுதியுடன் போராடி இந்திய இராணுவத்தை வெளியேற வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உரியது. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த கொரில்லா இயக்கம் என்ற மதிப்பை புலிகள் இயக்கம் பெற்றது.
இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாமல் போன இந்தியா, புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாக வெல்லத் திட்டமிட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில் போலியான மாகாணச் சபைத் தேர்தல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி தனது கையாட்களான போட்டிக் குழுக்களைக் கொண்டு மாகாண அரசு ஒன்றையும் அமைத்தது. ஆனாலும் இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் புலிகள் இயக்கம் பேச்சு நடத்தி இந்தியப் படை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை ஓங்கி ஒலிக்க வைத்தது. இதன் விளைவாக இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கப்பட்டது.
இராஜீவ் காந்தி தோல்வியடைந்து வி.பி.சிங் பிரதமரானவுடன் இந்தியப் படை திரும்பப் பெறப்பட்டது. அந்தப் படைகளுடனேயே இந்திய கைப் பொம்மை வரதராசப் பெருமாள் கூட்டமும் இந்தியாவுக்குத் தப்பி ஓடியது. இராணுவ ரீதியாகவும் இராச தந்திர ரீதியாகவும் இந்தியாவை பிரபாகரன் முறியடித்தார். புலிகள் வீழ்ந்து விடவில்லை
முதல் 10 ஆண்டுகளில் கொரில்லாப் போர் முறையைக் கையாண்ட விடுதலைப் புலிகள் அடுத்த 10 ஆண்டுகளில் மரபு வழி இராணுவமாக உருவெடுத்தனர். தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளுடன் போராடி பல வெற்றிகளைப் பெற்று தங்கள் தாயகத் தின் பெரும் பகுதிகளை மீட்டெடுத்தனர். தமீழீழப் பகுதியில் தனி ஆட்சியை நிறுவினார்கள்.
இந்த நிலைமையில் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமான யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழர் களின் மனஉறுதியைக் குலைக்கவும் புலிகளின் முதுகெலும்பை முறிக்கவும் திட்டமிட்டு 1995ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பெரும் படையெடுப்பை சிங்கள இராணுவம் தொடங்கியது. சிங்களரின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கத் திட்டமிட்ட பிரபாகரன் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவதென முடிவுசெய்தார். அந்த முடிவை ஏற்று புலிகள் மட்டுமல்ல 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட யாழ் மக்களும் வெளியேறிய நிகழ்ச்சி வரலாறு காணாததாகும். ஓர் இடத்தைக் கைப்பற்று வதைவிட அதைத் தக்க வைப்பது மிகக்கடினமானது என்பதை சிங்கள இராணுவம் காலம் கடந்து உணர்ந்தது. யாழ்ப்பாணத்தை தங்கள் வசம் வைத்துக்கொள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைப் பயன்படுத்த வேண்டி நேரிட்டது. சிங்கள வீரர்களில் கணிசமானவர்களை இவ்வாறு முடக்கிய பிரபாகரன் 1996ஆம் ஆண் டில் தொடங்கி 4 ஆண்டு காலத்திற்குள் மாங்குளம், பரந்தன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெற்றிலைக்கேணி, பூநகரி போன்ற முக்கிய இராணுவ முகாம்களை வீழ்த்தினார். வவுனியா, வடமராச்சி, தென் மராச்சி கிழக்கு மாநிலத்தில் பெரும் பகுதிகள் ஆகியவற்றைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இறுதியாக வெல்லப்படமுடியாது என்று கருதப்பட்ட ஆனையிறவு முகாமைத் தகர்த்து சிங்கள இராணுவத்துக்கு புலிகள் மரண அடி கொடுத்தனர். இந்தப் போர்களில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவ வீரர்கள் மாண்டனர். பல நூறு கோடி பெறுமான ஆயுதங் களைப் புலிகள் கைப்பற்றினர். புலிகளை ஒழித்துவிட முடிய வில்லை
வெற்றிக்கு மேல் வெற்றிபெற்று வந்த போதிலும் பிரபாகரன் சமாதானத் திற்கான கரங்களை நீட்டத் தயங்க வில்லை. சிங்கள அரசுடன் தனித்துப் பேச தான் விரும்பவில்லை. மூன்றாவது நாடு ஒன்றின் முன்னிலையில் பேசுவ தற்குத் தயார் என்று பிரபாகரன் அறிவித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அதிபர் சந்திரிகா மறுத்தபோது சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தந்தின் விளைவாக நார்வே நாட்டின் மத்தியஸ்தத்தை அவர் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலக அரங்கில் பிரபாகரனுக்கு கிடைத்த இராசதந்திர வெற்றி இதுவாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆகாய கடல்வெளிச் சமர், மணலாறு சமர், தவளை நடவடிக்கை, கொக்குத் தொடுவாய் சமர், இடிமுழக்கம், ஓயாத அலைகள்-1, சத்ஜெய 2, 3 முறியடிப்பு சமர், பரந்தன், ஆனையிறவு சமர், வவுனத் தீவு சமர், கிளிநொச்சி, பரந்தன் முகாம்கள் மீதான ஊடுருவல் தாக்குதல், ஓயாத அலைகள்-2, ஜெயசிக் குறு முறியடிப்புச் சமர், ஓயாத அலை-3, ஓயாத அலைகள்-4, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல சமர்கள் பிரபாகரனின் இராணுவத் திறமைக்கு சான்று கூறுகின்றன. அதிலும் வெல்லப்படமுடியாதது என்று கூறப்பட்ட ஆனையிறவு சிங்கள இராணுவ முகாமை தரை, கடல் மார்க்கமாகச் சுற்றி வளைத்து விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் உலக இராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படு கிறது. இரண்டாம் உலகப்போரின் போது பிரான்சில் உள்ள நார்மண்டி கடற் கரையில் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் பெருமளவில் தரையிறங்கி ஜெர்மானியப் படைகளை முறியடித்து பெர்லின் வரை விரட்டிச் சென்றன. நார்மண்டி தரை யிறக்கத்துடன் புலிகளின் ஆனையிறவு இறக்கத்தை உலக இராணுவ விமர்சகர் கள் இன்றும் ஒப்பிடுகின்றனர். உலக நாடுகளின் இராணுவ கல்லூரிகளில் இது வியப்புடன் போதிக்கப்படுகிறது.
பிரெஞ்சுப் படைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சரணடைய வைத்த வியட்நாம் ஜெனரல் ஜியா என்பவரின் போர்த் திறமைக்கு நிகரானது பிரபாகரனின் திறமை என இராணுவ விமர்சகர்கள் போற்றுகின்றனர்.
இந்திய-இலங்கை உடன்பாட்டின் சூத்திரதாரிகளில் ஒருவரும் பிரபாகரனை சுட்டுக்கொல்லுமாறு இந்தியப் படைத் தளபதிக்குக் கூறியவருமான ஜே.என். தீட்சித் பிற்காலத்தில் எழுதியுள்ள புத்தகத்தில் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்:
'புலிகளின் இயக்கத்தின் தலை வரான பிரபாகரனிடம் காணப்படும் கட்டுப்பாடு, மனஉறுதி, ஈழத்தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்துள்ளவை ஆகியவை சிறந்த குணாதிசயங்கள் ஆகும். இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும் நெஞ்சில் சுதந்திர தாகம் சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருப்பதையும் அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் சுபாவமும் இவரிடம் உள்ளது என்பதையும் இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாகப் பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைப்போல அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த லெப்.ஜெனரல் தீபிந்தர் சிங், லெப். ஜெனரல் சர்ரேஷ் பாண்டே போன்றவர் களும் பிரபாகரனை வியந்து பாராட்டியுள்ளனர்.
இன்னல்களும் இடர்களும் சூழ்ந்த நெருக்கடியான காலகட்டங் களிலும் தளராத தன்னம்பிக்கையுடனும் குன்றாத உறுதியுடனும் செயலாற்றுவது தான் பிரபாகரன் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம் என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கமும் குறிப்பிட்டிருக்கிறார்.
பல உள்நாட்டு, வெளிநாட்டு சக்தி கள் பிரபாகரனைத் திசை திருப்பவும், விலைக்கு வாங்கவும் செய்த முயற்சி களும் - விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தவும் பலர் மேற்கொண்ட கடும் முயற்சிகளையெல்லாம் முறியடித்துத்தான் பிரபாகரன் புலிகள் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது தன்னலமற்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களை ஒரு கட்டுக்கோப்பான தேசிய இனமாக மாற்றி விடுதலைக்காகப் போராடுகிற முன்னணி அணியாக்கியவர் பிரபாகரனே. தமிழ்த் தேசிய இனத்தை ஒன்றுபடுத்துகிற மாபெரும் சக்தி மட்டுமல்ல அவர் அதன் உருவகமும் அவரேதான். தமிழர் தேசிய எழுச்சியின் வடிவமாக அவர் விளங்குகிறார்.
அவர் மரணத்தை வென்றவர். 17ஆம் வயதில் இருந்து சாவுடன் போராடி வருகிறார். தனது மக்களின் விடுதலை என்ற உன்னத கோட்பாட்டிற் காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அதற்காகவே போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கும் அவர் துணிந்திருக்கிறார். வெற்றிகளும் தோல்விகளும், பிரதேசங் களை இழப்பதும் மீண்டும் வெல்வதும் அவரை ஒருபோதும் பாதித்ததில்லை. உடனிருந்த போராளிகளை களத்தில் இழந்தபோதும். அவரது மனஉறுதி அதிகமாகியிருக்கிறதே, தவிர, குறைந்த தில்லை. அதைப்போல துரோகங்களும் அவரைத் துவளவைத்ததில்லை.
முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போராட் டத்தில் அடுத்து என்ன என்பதை யூகித்தறிவதிலும் அதற்கு மாற்று என்ன என்பதை முடிவு செய்வதிலும் அவருக்கு நிகர் அவரேதான். போரின் கடைசிக் கட்டத்தில் உருவாகப்போகும் நெருக்கடி களை அவர் யூகித்தறிந்திருந்தார். அதனால்தான் பதிலடித் தாக்கு
தலில் வலிமையை விரயம் செய்யாமல் தனது தோழர்களையும் ஆயுதங்களை யும் பாதுகாப்பதில் குறியாக இருந்தார். போர் முடிந்து ஐந்து மாதகாலத்திற்கு மேலாகியும் புலிகளின் ஆயுதக் குவியல் களை சிங்கள இராணுவத்தினரால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. பீரங்கிகள், டாங்கிகள், கவச வாகனங்கள், மிக விரைவுப் படகுகள், விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை எல்லாம் என்ன ஆயின? எங்கு மறைந்தன? இந்த கேள்விகளுக்குரிய விடையைத் தேடித்தான் சிங்கள-இந்திய உளவுத் துறைகள் படாத பாடுபட்டுக்கொண்டி ருக்கின்றன.
நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியதிலிருந்தே புலிகளின் குறி இராணுவ ரீதியான வெற்றிகளிலிருந்து விலகி சர்வதேச ஆதரவு என்பதன் மீதே குறியாக இருந்து வந்தது. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப் படுகிற விசயங்கள் அனைத்துமே புலிகளின் இராச தந்திர காய் நகர்த்துதலுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுக்கப்போகும் முக்கிய அம்சங்களாகும். சர்வதேச ரீதியிலான ஆதரவே தமிழீழம் விரை வில் உருவாக வழிவகுக்கும் என்பதை புலிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
புலிகளுக்கு தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு சிங்கள இராணுவத்தின் வலிமையோ - அதற்குத் துணையாக நின்ற சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா போன்ற அணு ஆயுத வல்லரசுகளும் மேலும் 15 நாடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ உதவியும் மட்டுமே காரணமல்ல. உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் முக்கியமான காரண மாகும். அமெரிக்கா மீது செப்டம்பர் 11ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைச் சிறிதும் சகித்துக்கொள்ளமுடியாத சூழ் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பயங்கர வாத அமைப்புகளுக்கும் தேசிய விடுத லைக்காகப் போராடும் அமைப்பு களுக்கும் இடையே உள்ள வேறுபாடு களை இது மங்கச் செய்துவிட்டது. எனவே சிங்கள அரசு இந்தச் சந்தர்ப் பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான தனது போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராகச் சித்திரித்து பல நாடுகளின் ஆதரவை பெற்றது. 30க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்தை பயங்கர வாத அமைப்பு என்று கூறி தடை செய் துள்ளன. இதன் மூலம் புலிகள் இயக் கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிங்கள அரசு மறைமுகமாகப் பெற்றுவிட்டது.
இந்த வேண்டாத சூழ்நிலையை மாற்றுவதற்கு இப்போது வழி பிறந் துள்ளது. இலங்கையின் போர் அவலங்கள் உச்ச நிலை அடைந்தபோது உலக நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் உருவப் பதாகைகளுடனும் வீதிகளில் இறங்கி போர்க்குரல் கொடுத்தார்கள். தமிழகம் உட்பட உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்களின் ஆவேசப் பேரணிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலும் வெளி நாடுகளிலும் 17 தமிழர்கள் தீக்குளித்து தங்கள் உயிர்களைத் தியாகம் செய் தார்கள். தமிழீழப் போராட்ட வரலாற்றில் இத்தகைய ஆதரவு எழுச்சி இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. இந்த தொடர் போராட்டங்களின் விளைவாக மேற்குலக நாடுகள் பலவும் சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கண்டனங்களை எழுப்பின. சிங்கள அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும் இந்நாடுகளால் எழுப்பப்பட்டன. இலங்கைக் களத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் உலக இராசதந்திரக் களத்தில் பிரபாகரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஆசியப் பகுதியில் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் எதிர் துருவங் களாக ஈடுபட்டிருக்கும் சீன-இந்திய ஆதிக்கச் சக்திகள் தமிழர்களுக்கு எதி ராக சிங்கள தேசத்திற்குக் கைகொடுத்தன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய உள்முரண்பாடுகள் நாளுக்கு நாள் கூடுமே தவிர குறையப் போவதில்லை. இந்துமாக் கடலில் இலங்கையின் ஊடாக சீனா காலூன்று வது தனக்கு பேரபாயம் என்பதைக் காலம் கடந்தாவது இந்தியாவும் உணரத் தொடங்கியுள்ளது. அதைப்போல அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இந்துமாக்கடலில் சீன ஆதிக்கம் வருவதை விரும்பவில்லை. மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கு நாடுகளுக்கும் செல்லுகின்ற கடல் மார்க்கம் வணிக ரீதியில் மட்டுமல்ல இராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது தங்களின் நோக்கங்களுக்கு அபாயகர மானது என்பதை இந்நாடுகள் உணர்ந்திருக்கின்றன. இதன் விளைவாக வும் உலக அரசியல் மாற்றங்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வெகுவேகமாக உருவாகி வருகின்றன.
பிரபாகரன் காலத்தில் அவர் தலைமையின் கீழ் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்காவிட்டால் இனி ஒரு போதும் வேறு யார் காலத்திலும் அது கிடைக்கப்போவதில்லை என்பதை உலகத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உலகத் தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டம் உக்கிரமடையும் காலக் கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் தொடங்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.தமிழீழ மக்களும் போராளி களும் இதுவரை செய்துள்ள தியாகம் அளப்பரியது. சின்னஞ்சிறிய தமிழீழத் தின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது இந்தத் தியாகம் அதன் சக்திக்கு மீறியதாகும். மக்கள் தாமாக முன்வந்து தங்கள் மண்ணை மீட்க செய்துள்ள இந்த தியாகம் ஒருபோதும் வீணாகாது. கடந்த 30 ஆண்டு காலத்தில் அந்த மக்கள் அனுபவித்த துயரங்களும் இன்னும் அனுபவித்து வருகிற துன்பங்களும் அவர்களின் உள்ளங்களில் வைரமேற்றி உள்ளன. தங்கள் தலைமுறையிலேயே இந்தத் தன்னிக ரல்லாத தலைவனின் காலத்திலேயே தமிழீழத் தாயகம் விடுதலை பெற்றாக வேண்டும். நமது அடுத்த தலை முறையினர் சுதந்திர நாட்டில் சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும் என்ற மாறாத மனஉறுதியை இந்த மக்கள் கொண்டிருக்கிறார்கள்.
தாயக விடுதலைக்காகக் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை யைத் தாருங்கள் என பிரபா கரன் கேட்டபோது கொஞ்சமும் தயங்காமல் தாய்மார்கள் தாங்கள் பெற்ற புதல்வர்களையும் புதல்வி களையும் உச்சிமுகர்ந்து முத்த மிட்டு அனுப்பி வைத்தனர். செல்பவர்கள் மீண்டும் வராம லும் போகலாம் என்பதைத் தெரிந்தே அவர்கள் பிள்ளை களைத் தியாகம் செய்ய முன் வந்தனர். அதைப்போல விடுதலை வேள்வியில் தான் பெற்ற மகனையும் அர்ப்பணித்த தங்கள் தலைவனைக் கண்டு அந்த மக்கள் நெக்குருகிப் போயிருக்கிறார்கள்.
வயதான தனது பெற்றோரைக் கூடப் பாதுகாக்க பிரபாகரன் முன் வரவில்லை. மக்களுக்காவது அவர் களுக்கும் ஆகட்டும் என்ற உறுதியோடு இருக்கும் தலைவனைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்துள்ளனர். முள்வேலி முகாமில் வதைபடும் இலட்சக்கணக்கான மக்களோடு அந்த மாவீரனைப் பெற்ற பெற்றோரும் துன்பங்களை அனுபவித்து வருவதை நேரில் காணும் மக்கள் தங்கள் தலைவனை முன்னிலும் அதிகமாக நேசிக்கிறார்கள். வாராது போல் வந்த மாமணியாகத் திகழும் இந்தத் தலைவனின் கீழ் அனைத்துவகைத் தியாகங்களையும் செய்ய அவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள்.
வீரமே ஆரமாகவும் தியாகமே அணியாகவும் கொண்ட அந்தத் தலைவன் இவர்களின் கனவை நிச்சயம் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை அவர்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்திருக்கிறது. எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத தாக்குதலைத் தருவதுதான் பிரபாகரனின் சிறந்த போர் உத்தியாகும். வீழ்ந்த ஈழம் இனி எழும், வெல்லும், காலம் அதைச் சொல்லும்.
நன்றி: http://www.thenseide.com/

“இது என்ன காலம்?
நுழைவாயிலில் அமர்ந்து கொண்டு
நம்வீடு எங்கேயென்று
தேடிக் கொண்டிருக்கிறோம்”
- பாடியவர் பஞ்சாபிக் கவிஞர் மஞ்சித் திவானா.
சீக்கியரின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலின் மீது தொடுக்கப்பட்ட ஆஃப்ரேஷன் புளுஸ்டார் – தாக்குதலில் அலைக்கழிவுக்குள்ளான சீக்கியரின் நிலை பற்றிப் பேசுகிறது இக்கவிதை. ஆனால் சொந்த பூமியில் வீடு எங்கே, ஊர் எங்கே, நிலம் எங்கே, வாழ்வு எங்கே என்ற மிகப்பெரிய கேள்விகளுடன் துக்கித்து நிற்கிற ஈழத்தமிழருக்காகவும் எழுதப்பட்டது போல் தோன்றுகிறது.
ஆபரேஷன் புளுஸ்டாரை நடத்தியவர் சாதாரண ஆள் அல்ல; தென்னாசியாவை தன் கட்டுக்குள் வைத்து ஆண்ட பிரதமர் இந்திரா காந்தி. இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளைப் போற்றிப் பாராட்டி பொற்கோயிலுக்குள் அவர்களின் உருவப் படத்தை வைத்து இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள். டெல்லியிலும், பொற்கோயிலிலும் சீக்கியர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு வருத்தம் தெரிவித்து கொலையாளிகள் படம் முன்பு சோனியா காந்தி மன்னிப்புக் கோரியது சமகாலநிகழ்வு.

இலங்கையின் நேரடி நெறியாளனாக இந்தியா
பஞ்சாபியருக்கு வரலாறு மீண்டது போல் அல்லது அவர்கள் தமது வரலாற்றை மீட்டெழுதிக் கொண்டது போல், ஈழத்தமிழருக்கு நிகழுமானால், அது உண்மையில் தமிழ்ப் பிரதேசத்தின் வசந்தம் மீட்டெடுக்கப்படும் காலமாக அமையும்.
* “ஆயிரம் இட்லர்கள் சேர்ந்தாலும், ஒரு இராசபக்ஷேக்கு ஈடாக மாட்டார்கள். ஆயிரம் கோயபல்ஸ்கள் இணைந்தாலும் ஒரு கோத்தபய ராசபக்ஷேக்கு சமமாக முடியாது”. அமிர்தசரஸில் சோனியாகாந்தியை மண்டியிடச் செய்தது போல் ஒப்பில்லாக் குரூரங்களின் உற்பத்தியாளர்களை மண்டியிடச் செய்ய ஈழத் தமிழர்களுக்கு வலிமையில்லை. தமது வலிமையை மறுபடி சேகரித்துக் கொள்ள இத்தனை ஆண்டுகள் என காலவரையறை ஏதும் செய்ய முடியாத பின்னடைவு.
பிணங்களுக்கூடாக ஒரு பெண் தப்பி வந்த ஒரு நிகழ்ச்சியை பேராசிரியர் சரசுவதி விவரித்தார். முகாம்களில் ஒவ்வொரு நாளும் பிணங்கள் குவிகின்றன. ஒரு வாரத்தில் 1400 பேர் மரணமடைவதாக ஐ.நா. குறிப்பு ஒன்று கூறுகிறது. சிங்களச் சிப்பாய்களுக்குப் பிணங்களைப் புணருவது பிடிக்கும் பிணங்களின் நாற்றம் பிடிக்காது. லாரிகளில், வேன்களில் குவியல் குவியலாகப் பிணங்கள் ஏற்றப்படுகையில், வாகன ஓட்டுநருக்குப் பணம் கொடுத்து பிணங்களோடு பிணமாய் மறைந்து கொள்வார்கள். அப்படி தப்பித்து வந்து ஒரு பெண் மீது பதினைந்து பிணங்கள் கிடந்தனவாம். பிணத்தைக் கொட்டுகிற இடத்திலிருந்து தப்பித்து வர, அங்கேயும் பணம் அளக்க வேண்டும். சில லட்ச ரூபாய் செலவில் உயிர் தப்பி வந்தாள் அந்தப் பெண்.
யானையின் கால்பட்ட சிறு புழுப்போல், மொழி, இன, வரலாறு சார்ந்த அடையாள அரசியல்கள் அழிக்கப்படுகின்றன. இத்தகைய அடையாளங்களிலிருந்து எழுகின்ற எதிர்ப்புக் குரல்கள் தேச விரோத, மனித விரோத, பயங்கரவாதக் கருத்துக்களாக அனைத்து அரசுகளாலும் ஏகாதிபத்தியங்களாலும் பார்க்கப்படுகின்றன. உலகமயமும், உலகமயத்தின் பொருட்டு தேசிய அரசியலை அழிப்பதும், அது பயங்காரவாத ஒடுக்கு முறையாக முன்னிறுத்தப்படுவதுமாக தற்போதைய காலம் உள்ளது.
ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கலுக்கும், தேசிய, இன, மொழி, விடுதலைப் போராட்டங்களை பயங்கரவாதமாக உருவகித்து ஒடுக்குவதற்கும் இடையே உள்ள உறவை தேசபக்தி அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அண்மையில் வெளிவந்துள்ள ‘புதிய தலைமுறை’ என்ற வாரஇதழ் (1.10.2009 தலையங்கம்) இந்தியாவை வல்லரசாக ஆக்கிக் காட்ட இன்றைய இளைஞர்களை அழைக்கிறது. “இந்தியா வல்லரசாக மாற வேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம் எல்லோரிடையேயும், குறிப்பாக இளைஞர் மத்தியில் பரவவேண்டும். அதற்கு ஏன் மாற்றம் வேண்டும், எதில் மாற்றம் வேண்டும் என்னும் சிந்தனைகள் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும்”- என்று வெளிப்படையாக அறிவிக்கிறது மாறத் தடையாக இருப்பவைகள்.
“மனித நேயத்தை மீறி ஓங்கி விட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப் பற்றும்” எனப் பட்டியலிடுகிறது. இனப்பற்று, மொழிப்பற்று போன்ற தேசிய இன அடையாளங்களை நாட்டு நலனுக்கு எதிராகக் காணுகிற இந்தப் பார்வை – ஆளும் வர்க்கக் குழுக்களின், அதிகார நிலையிலிருப்போரின் இயல்பான கருத்தாக இருக்கிறது. தேசிய இன அடையாள அரசியலை மறுக்கிறதோடல்லாமல், அவைகளை நாட்டு நலனுக்குகெதிரானதாகக் காட்டுவது அரச பயங்கரவாதம் (புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் மாலன்).
உலகமயம், தாராளமயம் தனியார் மயம் – என்பவை தேசியப் பொருளியல் மீதான போர். இந்தப் போரைத்தான், இந்தியா உட்பட அனைத்து விரிவாதிக்க நாடுகளும் அரசியல் தளத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அறிவித்துள்ளன.
இலங்கைப் பருந்தின் கால்களில் அகப்பட்ட சின்னஞ்சிறு கோழிக்குஞ்சைத் தீர்த்துக் கட்டுவதற்கு, மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியா முதல் சீனா, பாகிஸ்தான் வரை அனைத்துப் பயங்கரவாதிகளும் அணிவகுத்தார்கள். சமீபகால வரலாற்றின் ஒப்பில்லா இனப்படு கொலையைச் செய்து முடித்தார்கள்.
* சிங்களப் பாசிசத்தின் (1) பின்புலமாக (2) துணையாக (3) நேரடி நெறியாளனாக மூன்று கட்டங்களாய் நின்றது இந்தியா. இந்த மூன்று கட்டங்கள் தென்னாசியாவில், ஒரு வல்லரசாக விரிவாதிக்கமாக வளர்ந்து வந்த இந்தியாவின் படிநிலை வெளிப்பாடுகள். இந்திய விருப்பம் சார்ந்தே இலங்கை இயங்க வேண்டும் என்பதின் அர்த்தமாக மட்டுமல்ல. வல்லரசு சார்ந்தே பிறநாடுகள் இயங்க வேண்டுமென்பதின் நிரூபணமும் ஆகிறது. இது போன்று துணைக்கிரகங்கள் சுற்றுவதைத் தான் மாலன் போன்ற இந்திய தேசப்பற்றாளர்களும், பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு வித்திட்ட அப்துல்கலாம் போன்றவர்களும் விரும்புகிறார்கள்.
ஈழப்போர் ஒரு இனமக்களின் அடையாள மீட்புப் போர்.
2001- செப்டம்பர் 11க்குப் பிறகு எந்தவொரு இன மக்களின் எழுச்சிகளையும், விடுதலைப் போராட்டங்களையும், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் அணிவகுப்பையும் பயங்கரவாதம் எனவும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ எனவும் தனியொரு கொள்கையாக்கி நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்களும், இந்திய வல்லாதிக்கமும் முன் வந்தன.
அரசபயங்காரவாதம், உலகளவில் ஒரு இணைப்பாக ஆகிவிட்ட நிலையில் தான், இந்த நாடுகள் ஒன்று சேர்ந்தார்கள்.
இது என்ன காலம்? ஈழத்தமிழர்களின் இழவுக் காலம்.
எவருடைய உலகு? அரச பயங்கரவாதிகளின் உலகு.
* அனைத்துலக அரசபயங்கரவாதிகளும் அணிவகுத்து நிற்க எதிரிகளாய் மக்கள் நிற்கிறார்கள். காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் – கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இல்லை இல்லை, மன்னிக்கவும் செம்மொழி மாநாடு?

“கீழை நாடுகளின் பண்பாட்டு ஆராய்ச்சியாளர்களின் 26-வது காங்கிரஸ் 1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் கூடியது. அதற்கென அழைக்கப்பட்ட பிரதிநிதிகளில் தமிழ் அல்லது திராவிட மொழிகள் அல்லது பண்பாட்டுத் துறைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போர் டெல்லியில் ஒன்றுகூடி இக்கழகத்தை அமைத்தனர். இதன் நோக்கம் தமிழ்மொழி, இலக்கியம், சமயங்கள், தத்துவம் முதலிய பண்பாட்டுத் துறைகளில் ஆராய்ச்சிகளை வளர்ப்பதாகும். தென்னிந்திய மொழி இலக்கியங்களும், பண்பாடுகளும், தென்கிழக்கு ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சியும் என்ற அகன்ற எல்லைக்குட்பட்டு, தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அதன் நோக்கம்.
ஆண்டு தோறும் உலகில் எப்பகுதியில் தமிழ் – அல்லது தென்னிந்தியப் பண்பாட்டில் எத்துறையில் ஆராய்ச்சி நடப்பினும் அதனைச் சேகரித்து ஆண்டறிக்கையொன்று வெளியிடுவது.
முதல் அறிக்கை கடந்த 5 ஆண்டுகளுக்குரிய ஆராய்ச்சிக் குறிப்புகளைத் திரட்டி வெளியிடுவது அந்த அறிக்கை 1966 -க்குள் வெளியிடப்பட வேண்டும்.
இரண்டாவது பகுதித் திட்டமாக 1966-ல் தமிழ்நாட்டுக் கருத்தரங்கை நடத்துவது. இந்த நிறுவனத்திற்கு சர்வேதச தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்ற பெயரிடப்பட்டது. இக்கழகத்தின் தலைவராக பேராசிரியர் போலியசோவும், தாமஸ் பர்ரோ, எப்.பி.ஜே.கூப்பர், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் மு.வரதராசனார் ஆகிய நால்வரும் துணைத் தலைவர்களாகவும், கமீல் சுவலபிலும், சேவியர் தனிநாயகமும் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1965 ஜுன் மாதத்திலேயே உலக முழுவதிலுமுள்ள தமிழாராய்ச்சியாளர்களுக்கு இக்கழகத்தில் சேர அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழ் ஆராய்ச்சிகளில் ஏதாவது ஒரு துறையில், அல்லது தமிழக வரலாறு, பண்பாடு இவற்றோடு தொடர்புகொண்ட ஒரு துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு நூல்கள் எழுதியவர்களுக்கு மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டது. அவ்வாறு உறுப்பினர்களைச் சேர்த்த பிறகு தமிழாராய்ச்சி மாநாட்டுக் கருத்தரங்கை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இது பொது மாநாடு அல்ல, கருத்தரங்க மாநாடு என்பதையும், இதில் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெற்று அவற்றை எழுதியவர்களையே மாநாட்டு உறுப்பினர்களாக அழைத்தல் வேண்டும் என்பதையும் மாநாட்டு அமைப்பாளர்கள் கவனத்தில் கொண்டிருந்தார்கள்”.
இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – இலக்கிய உலகம் எதிர்பார்ப்பது என்ன? பேராசிரியர் நா.வானமாமலை..
இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அப்போது கூட உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. உலகத் தமிழ்மாநாடு என சுருக்கப்படவில்லை. இதனைப் பொது மாநாடாக மாற்றிவிடக் கூடாதென்பதிலும், இது கருத்தரங்க மாநாடு என்பதிலும் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்தார்கள். பொது மாநாடாக மாற்றிவிடுகையில், கொண்டாட்டமாக, ஆர்ப்பரிப்பாக ஆகிவிடுமென்று கருதினார்கள்.
“சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. ‘தமிழும் தமிழர் பண்பாடும் உலக ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படுகிறதென்பதற்கு முதல் மாநாடு ஓர் அயல்நாட்டில் நடைபெற்றதும், அம்மாநாட்டில் அயல்நாட்டுப் பிரதிநிதிகள் பலர் பங்கு பெற்றதும் சிறந்த சான்று” – என நா.வானமாமலை குறிப்பிடுகிறார்.
அம்மாநட்டின் தொடர்ச்சியாக நிறைவேற்றவேண்டிய திட்டமிடல்கள் பற்றி நா.வா. கூறுவார். “1966-ல் தமிழ்மாநாட்டுக் கருத்தரங்கை நடத்த சர்வதேச ஆராய்ச்சிக் கழகம் முடிவெடுத்தது. 1965 ஜூனிலேயே உலகெங்குமுள்ள தமிழாராய்ச்சியாளர்களுக்கு இக்கழகத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாடு நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்னரே ஐந்து முக்கியப் பிரிவுகளில் எழுதப்பட வேண்டிய கட்டுரைப் பொருள்களைப் பிரித்தனர். இவ்வைந்து பிரிவுகளும் தமிழாராய்ச்சிக்கு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.
* 1. இலக்கியக் கொள்கைகள்,
* 2. தமிழ்ச்சமூக வரலாறு,
* 3.தென்கிழக்காசியப் பண்பாடு,
* 4.மொழி (அமைப்பு வகை மொழியியல், வரலாற்று வகை மொழியியல், திராவிட மொழிகளின் ஒப்பீட்டு மொழியியல், தமிழை, தமிழரல்லாதோருக்கு கற்பிக்கும் வழிமுறைகள், தமிழ் மொழியில் பாடங்களைத் தொகுத்தல் எனப்பல),
* 5 மொழிப்பெயர்ப்புத் திட்டங்கள்.
இத்துறைகளில் இதுவரை அதிகமான ஆராய்ச்சிகள் நிகழ்ந்ததில்லை. எனவே, புதிய திசைகளில் தமிழராய்ச்சியைத் திருப்பிவிட இம்முயற்சி பயன்படும் என அமைப்பாளர்கள் கருதினார்கள்.
ஐந்து துறைகள் குறித்து ஒவ்வொரு துறைக்கும் தேவையான இதுவரை வெளிவந்த நூல்களைப் பற்றி முழு ஆராய்ச்சி நடத்துவதும், ஆராய்ச்சிக்கான பயிற்சியை நடத்துவது பற்றி ஆலோசனை கூறுவதும் இக்குழுக்களனைத்தையும் உள்ளடக்கிய ஆராய்ச்சிக் கழகத்தின் முழுப் பணியாகும்.” (இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – இலக்கிய உலகம் எதிர்பார்ப்பதென்ன? பேராசிரியர் நா.வானமாமலை)
முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான பணிகள் எவ்வாறு பகுக்கப்பட்டு, எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்று காணுவதின் வழியாக, தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் எவை என அறிய முடியும். வெற்றி – தோல்விகளை மதிப்பிடுவதின் வழியே முன்னர் நிகழ்ந்த தவறுகளைக் களைந்து, வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். முக்கியமாக “எதிர்காலத் திட்டமிடல்களை முழுமையாகச்செய்ய முடியுமென” – நா.வா.கருதினார்.
அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் சென்னையில் 1968 சனவரியில் நடந்த மாநாடு சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு. சர்வதேச தமிழ் ஆராய்ச்;சிக் கழகம் என்பது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் முடிவுற்ற பின்னர் செய்யத் தவறியதும், செய்ய வேண்டியதுமான பணிகளை நா.வா. விரிவாகப் பட்டியலிட்டார். மொழிப் பாதுகாப்பில், மொழிவளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு கொண்ட ஒரு தமிழ்நெஞ்சத்தின் கருத்துக்களாய் இவை வெளிப்படுத்தப்பட்டன.
இதுபோன்ற தமிழ்அறிஞர்களின் விமர்சனம் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால், அண்ணா ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு வெற்றியடைந்திருக்கும்.
பொது மாநாடாக நடத்துவதன் வழி பெருந்திரளான மக்களை ஈர்க்க எண்ணி வெகுமயப்படுத்தினர். மக்களுக்கான நிகழ்ச்சிகளாக தனிப்பிரித்துக் கொள்வது சரியானது தான். மக்களிடமிருந்து மொழியைப் பிரித்து தங்களுக்கான ரசசியக் குகையாக தனிமைப்படுத்திக் கொண்டனர் தமிழ் அறிஞர்கள் என்ற பழி முன்பே இருந்து வந்தது. ஆனால் ஆராய்ச்சி வயல்களுக்கு நீர்தளும்பப் பாய்வதற்கான பணிகள் – ஏற்கனவே பெற்ற அனுபவங்களிலிருந்து திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டுக்கான தயாரிப்புகள் அவ்வாறு நடைபெறவில்லை. மாநாட்டுச் செயற்குழு ஒன்று, முதலமைச்சர் அண்ணா தலைமையில் தமிழறிஞர்களே இல்லாமல், முழுக்க அலுவலர்களைக் கொண்டதாக உருவானது. கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகந்நாதன், தாம்பரம் கிறித்துவக் கல்லூரி முதல்வர் தவிர, தமிழ் வாசனை படாத ஒரு குழுவாக அமைக்கப்பட்டது. இக்குழு தான் இம்மாநாட்டின் ஆராய்ச்சி அலுவல்களை வடிவமைத்து வழிநடத்தியது.
“ஆனால் ஆராய்ச்சிக் கருத்தரங்கை நடத்த வழிகாட்டுவதற்கு வேறு ஒரு இணைப்புக்குழு தேவை. அக்குழுவில் பலதுறை ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அங்கம் வகிக்க வேண்டும். அத்தகையதோர் குழுவே ஆராய்ச்சிப் பணியை வழிநடத்த முடியும். அத்தகையதோர் குழு அமைக்கப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது. அமைக்கப்பட்டிருந்தாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்ப ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு அனுப்புவது போன்ற வேலைகளில் அக்குழு ஈடுபட்டதாகத் தெரியவில்லை”- என்று நா.வா. சுட்டிக் காட்டினார்.
“இத்திட்டங்களை நிறைவேற்ற தமிழாராய்ச்சியிலும், இலக்கியங்களைப் பரப்புவதிலும் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகங்கள், கலை, இலக்கிய மன்றங்கள், (அமைப்புகள்) எழுத்தாளர் மன்றங்கள், வாசகர் வட்டங்கள், தனி ஆராய்ச்சியாளர்கள், அனைவருடைய ஒத்துழைப்பையும் பெறுவது அவசியம்” – என்று வழி காட்டினார்.
தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்களின் வழிகாட்டல் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சமகாலத்தில் நாம் எழுப்புகிற கேள்விகள் அல்ல இவை. 1968 சனவரியில் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ்மாநாடும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடும், அம்மையார் ஜெயலலிதா நடத்திய ஏழாம் உலகத் தமிழ் மாநாடும் இக்கேள்விகளுக்கான பதில்களை வழங்காமலே தொடர்ந்தன. உண்மையான தமிழை, தமிழ் வளர்ச்சியைப் புறக்கணித்தன. தனிமனிதப் புகழ்பாடுதலில் ஒடுங்கித் தாழ்ந்தன.
அண்ணாவின் காலத்தில் திட்டமிடப்பட்ட மாநாடு அறிஞர்களின் ஒன்றுகூடல் என்பதிலிருந்து சரிந்து கொண்டாட்டம், ஆர்ப்பரிப்பு என்ற புள்ளிகளுக்கு இறங்கியது. அப்போது மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தவர் கருணாநிதி என்று சொல்கிறார்கள்.
தலைநகர் சிலைகளால் நிறைந்தது. சிலை திறப்பு விழாக்கள் ஏழு நாட்களும் தொடர்ந்தன. பழம் பெருமை பேசும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. சென்னையின் அனைத்துக் கலை அரங்குகளும் கலை நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன. சொற்பொழிவு அருவிகள் மக்களை நீராட வைத்தன. கவியரங்க ஆற்றில் மக்கள் நீந்தினார்கள்.
“விழுந்தாலும் விதைபோல விழுவார்
எழுந்தாலும் சூரியன் போல் எழுவார்”
என்று அண்ணாவைப் பற்றி கவிஞர் அப்துல் ரகுமான் பாடிய கவிதை வரிகள் அந்தத் தீவுத்திடலை அன்று அதிரச் செய்தது. ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கொண்டாட்டம் என்ற அப்போது தொடங்கிய கடல்கோள் இந்த ஒன்பதாம் மாநாட்டிலும் தொடர இருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை உலக கால்பந்துப் போட்டி. ஆண்டுக்கு ஒருமுறை உழவர் பொங்கல். அதுபோல் உலகத்தமிழ் மாநாடு இத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று வரையறை இருக்கிறதா?
* ஒரேயொரு விதிதான்; அண்ணா நடத்தினார்; எம்.ஜி.ஆர். நடத்தினார். மூன்றாவதாய் அம்மையார் நடத்தினார். இப்போது நான் என்ற கணக்கைத் தவிர, வேறு ஆண்டுக் கணக்குகள் எதுவுமில்லை. 1969 முதல் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும், ஒரு உலகத்தமிழ் மாநாடு கூட நடத்தியதில்லையே என்ற கணக்கைச் சரிசெய்ய இப்போது ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு.
ஏதொன்றையும், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களோடு தொடர்புபடுத்தி ஆய்வுக் கட்டுரைகள் வழங்க தமிழறிஞர்கள் காத்திருக்கிறார்கள். மடியிலேயே தயாராக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆய்வு செய்து தயாரிக்க உலகத்தமிழறிஞர்கள் கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டதால் ஆறுமாதம் தள்ளிவைக்கப்படுகிறதாம். அறிவிப்பை வெளியிடுகையில் தமிழறிஞர்கள் ஒளவை நடராசன், மா.நன்னன், வா.செ.குழந்தைசாமி, கவிக்கோ அப்துல் ரகுமான், கவியரசு வைரமுத்து அருகிருந்தார்கள்.
* “கும்பிடுகிற என் கைகள்
ஒரே கைகளாகத் தான் இருக்கின்றன
கால்கள் தான் மாறிக் கொண்டே இருக்கின்றன”
என்று பெருமையாய் ஒப்புதல் வாக்கு மூலம் தந்தார் ஒரு தமிழறிஞர். இது இவர்கள் தகுதியைச் சுட்டிக்காட்டப் போதுமானது.
“தொல்காப்பியர் விருது – முதல்விருது கலைஞருக்கு வழங்கப்பட வேண்டும்” – என்று அறிவித்துள்ளார் பேராசிரியர் தமிழண்ணல். எப்படி இருந்த இவர் இப்படி ஆகிவிட்டாரே என்ற வருத்தம் மிஞ்சுகிறது.
* “மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்”
என்று சிலிர்த்தெழுந்த தன்மான உரை – இன்று விதந்து பேசப்படுகிற இலக்கியச் சுவைக்கான வரிகள் மட்டுமே.
தனக்குள் வீங்கிப் பெருத்த படைப்பாளுமை பற்றிய மிதமிஞ்சிய கணிப்பில் பிறக்கும் அறிவுச் செருக்கு ஒன்றுண்டு. சிங்கம் போல் கர்ஜிக்கும். யானை போல் பிளிறும். ஆனால் அங்கீகாரத்தின் முன், மு.சுயம்புலிங்கத்தின் யானை போல் அடங்கிப் போகும்.
* “ஐம்பது பைசாவுக்கு
கால் மடக்கி, கையேந்துகிறது
எங்கள் ஊர் யானை”
நவீன இலக்கிய வட்டத்தில் இயங்குகிற கலை இலக்கியவாதிகள், கம்பீரம் காட்டி, கம்பீரமாய் உள்ளடங்கிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அடையாள விரும்பிகள் எல்லா வட்டத்திலும் இருக்கிறார்கள். எனக்குரிய இடம் எங்கே என்று அலைகிறவர்களை, ஏற்கனவே சென்னை சங்கமம் நடத்திய அனுபவம் உள்ளவர்களால் உள்ளிழுத்துக் கொள்வது எளிது.
* மொழிவளர்ச்சியை உறுதிசெய்யும் ஆய்வுகளோ, புதிய ஆக்கங்களோ, இந்த ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் நிகழப் போவதில்லை. உருப்படியாய் எதுவொன்றும் நிறைவேறாது என்பதை உறுதிபடச் சொல்வதற்குரிய முக்கிய ஆவணமாக நமக்கு இருப்பது திராவிட முன்னேற்றக் கழகங்களின் (தி.மு.க., அ.தி.மு.க, ம.தி.மு.க.) பாரம்பரியக் கலாச்சாரமும், கலைஞரின் சுபாவமும் தான்.
கருத்துத் திரட்சியை விட, காட்சிப்படுத்துதலை முதன்மையாகக் கொண்டு வேரூன்றி வளர்ந்த கட்சி தி.மு.க. முதலில் அவர்கள் கற்றலில், எழுதுவதில் தான் தொடங்கினார்கள். வாசிப்பு, கற்றல் என்ற எழுத்து மொழியை விட, அடுத்த கட்டத்தில் நாடகம், திரைப்படம் காட்சி போன்ற மொழியை பிரதானமாக்கினார்கள். அலங்காரம், அடுக்குமொழியில் பேசுவது, உவமான உவமேயங்கள், நாடகம் போல் பேச்சில் விவரிப்பது – என சொற்பொழிவு, காட்சிரூபமாய் ஆக்கப்பட்டது.
* “எங்கள் பேச்சுக்கு ஓராயிரம் வாக்குகள் என்றால், எம்.ஜி.ஆர். முகத்துக்கு ஒரு லட்சம் வாக்குகள்” என்று அண்ணா மேடைப்பேச்சில் சொன்னது உண்மையானது.
காட்சி ஊடகமான திரைப்படத்தை முதன்மைப்படுத்தி வளர்ந்தார்கள். அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு இந்தக் காட்சி ஊடகம் ஆதாரமானது.
“தணிக்கை செய்யாது திரைப்படங்களை அனுமதித்தால், இரண்டு ஆண்டுகள் போதும்; திராவிட நாட்டு விடுதலை பெற்று விடுவேன்” என்று அண்ணா அப்போது பேசுவார். மொழி, நாடு – என்பவைகளில் உண்மையான தீவிர ஈடுபாடு எதுவுமில்லாமல், அர்ப்பணிப்பு உணர்வு ஏதுமற்று ஒரு இயக்கம் இருபது ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததெனில் கருத்துப் பதிவை விட காட்சிப் பதிவுகளை நடைமுறைகளாய்க் கட்டியமைத்தது காரணம். வங்கக் கடலின் அந்தக் கரையில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ்மக்கள் மரணத்திற்குள் போய்க்கொண்டிருந்த வேளையில், அதே கடலின் இந்தக் கரையில் உண்ணா நோன்பை அரங்கேற்றிக் கொண்டிருந்தது இதனுடைய உச்சம் எனலாம்.
* முக்கியமான அம்சம் இன்னுமொன்றுண்டு ; அது – கருணாநிதியின் குருதியில் கலந்து விட்டிருக்கிற அரசியல் இயல்பாகிப் போன ‘விழாமோகம்’, ‘தன்புகழ் வேட்கை’. அது இன்று பல கழகங்களின் அரசியல் கலாச்சாரமாக ஊத்தம் கொண்டுவிட்டது. ஒரு நாலு மீட்டர் பாலம் கூட இன்று தானாகத் திறந்து கொள்ளாது.
* “உலகில் வேறெங்கும் நடக்காத ஒரு கொடூரம் தமிழகத்தின் வெகு அருகில் உள்ள இலங்கையில் நடந்தும், அதற்கான எதிர்ப்பு இந்தியாவிலிருந்து எழவில்லை. இதற்குப் பதில் கேட்கத்தான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன். ஆனால் விஷா ரத்து செய்யப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டேன்” – என்கிறார் எலீன் ஷான்டர் என்ற பெண்மணி.
இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவர், மனிதஉரிமைப் போராளி. ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பவர். அமெரிக்காவில் ஒரு மாநாட்டில் இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து – “எலின் ஷான்டர் ஒரு வெள்ளைக்கார தமிழச்சி” என வியந்தாராம். (வைரமுத்து இன்று யாருடைய கைகளுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார் என்பதை பலர் அறியச் செய்யவே இந்த வாசகம்).
எலின் ஷான்டரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, பேசச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவுக்கு வர ஒருமாதம் முன்பே விஷா கிடைத்துவிட்டது. புறப்பட இரு நாட்களிருக்கையில், அவரது விஷா இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. தினமணி போன்ற நாளிதழ்கள் முன்பக்கத்தில் தலைப்பிட்டு எழுதின. நரக வேதனை அனுபவிக்கும் தமிழர்களின் குரலலை – இந்தியாவுக்குள் ஒலித்து விடுவார் என்ற அச்சம் காரணம்.
“இலங்கையின் நேரடி நெறியாளனாய் இயங்கியது ஏன் என்று இந்தியாவைக் கேட்பதாக இருந்தேன்” – என்று எலின் ஷான்டர் தெரிவித்திருந்தது ஒரு குமட்டில் (கன்னத்தில்) குத்துவிட்டு மறு குமட்டில் எடுப்பது போல் இந்தியாவுக்கு வலி எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் விஷா ரத்து செய்யப்படுவதில் முனைப்புக் காட்டினார் என்று எலின் ஷான்டரே தெரிவித்திருக்கிறார்.
தமிழினப் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்த, கேள்வி எழுப்ப வந்தவரே, விஷா ரத்து மூலம் தண்டிக்கப்படுகிறார். கருணாநிதி வருத்தம் கொள்ளவில்லை; வழக்கமாய் செய்வது போல் கடிதம் எழுதியும் கண்டிக்கவில்லை. உலக முழுதும் உள்ள தமிழர்கள் அவரை ‘தமிழினப் பகைவராகக்’ காணுவதில், அர்த்தம் உள்ளது; தமிழினத்தைக் காக்காமல், தமிழின மக்கள் பேசும் மொழியைக் காப்பது என்பது எவ்வளவு நூதனமான விளையாட்டு! தமிழை – தமிழர்களிடமிருந்து பிரித்து பூஜையறைப் படமாக உயர்த்தி மாட்டி விட ஒரு மாநாடு. தமிழர்களைக் கொன்றது போலவே அப்படியே தமிழையும் கொன்று விடலாம்.
சூ.தீபன்
நன்றி: ஈழநேஷன்.
பகுப்புகள் அரசியல்வாதிகள், இந்தியா, இன அழிவு, சமூக அவலங்கள், தமிழீழ மக்கள், தமிழீழம், தமிழ்படை, தலைவர், பிரபாகரன்
2009ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாட்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள்.
போர்ப் பகுதியில் இருந்து உயிர் தப்பிய 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் இராணுவப் பாதுகாப்போடு சிங்கள அரசு அடைத்தது. போர் முடிந்து ஐந்து மாத காலத்திற்கு மேலாகியும் அந்த மக்கள் விடுவிக்கப்பட்டு. தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்ப அனுமதிக்கப்படவில்லை.
முகாம்களில் போதுமான தங்குமிடம், சுகாதார வசதிகள், உணவு, மருந்து ஆகிய எல்லாமே பற்றாக் குறையாக இருந்தது. இதன் விளைவாக தினமும் 200 முதல் 300 பேர் வரை மடிந்துகொண்டிருக்கின்றனர்.
இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை வதைக்க இட்லர் அமைத்த முகாம்களைவிட இராசபக்சே அமைத்த முகாம்கள் மிகமோசமானவை என உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்த முகாமில் இருந்த மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், இடப் பெயர்வு, வாழ்வாதாரம், கூடிப்பேசும் உரிமை, குறைகளை முறையிடும் உரிமை ஆகிய எல்லாமே மறுக்கப் பட்டன. அய்.நா. அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பிற தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் இந்த மக் களுக்கு உதவுவதற்கு அனுமதிக்கப் படவில்லை. இந்தியா உட்பட உலக நாடுகள் அளித்த உதவியில் ஒரு சிறு பங்குகூட இந்த மக்களுக்குக் கிடைக்க வில்லை.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் இந்த முகாம்களில் உள்ள சீர்கேடான நிலைமை குறித்து மிகுந்த கவலையுடன் எச்சரித்தன. அந்த மக்களை விடுவித்து அவர்களது ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கும்படி வலியுறுத்தின. ஆனால் இராசபக்சேயின் கேளாக் காதிற்கு இந்தக் குரல் எட்ட வில்லை. இந்த நிலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சர்வ கட்சிக் குழு ஒன்று முகாம்களைப் பார்வையிட அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.
இந்தக் கோரிக்கையைத் திசை திருப்பவும் இலங்கை முகாம்களில் நடக்கும் கொடுமைகளை மறைக்கவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தந்திரத் திட்டம் வகுத்தார். அதற்கிணங்க காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்புவதாக அறிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, இலங்கை அதிபர் இராசபக்சேயிடமிருந்து தனக்கு வந்த அழைப்பின் அடிப்படையிலேயே இந்தக் குழுவை அனுப்புவதாக முதலமைச்சர் கூறினார். வேண்டு மானால் எதிர்க்கட்சிகள் இந்திய அரசை அணுகி அனுமதி பெற்று அவர்கள் போகட்டும் என எகத்தாளம் செய்தார்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் இராசபக்சே தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பவில்லை. இலங்கை அரசின் அதிபர் என்ற முறையில் தமிழக முதலமைச்சருக்கு அவர் அழைப்பு அனுப்பினார். இது தனிப் பட்ட அழைப்பு அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான அழைப்பாகும். முதலமைச்சர் என்ற முறையில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் குறித்து சர்வக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் கலந்து ஆலோசித்து அனைத்துக்கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு ஆழமான உள்நோக்கம் உள்ளது.
இலங்கையின் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, இந்த முகாம்களைப் பார்வையிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை. சர்வதேசப் பத்திரிகையாளர்களோ அல்லது உள் நாட்டுப் பத்திரிகையாளர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. தனது நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் களையோ பத்திரிகையாளர்களையோகூட முகாம்களைப் பார்வையிட அனுமதிக்காத இராசபக்சே கருணாநிதிக்கு மட்டும் அழைப்பு அனுப்பி அவர் அனுப்பிய தூதுக்குழுவை இராசோபச்சாரத்துடன் வரவேற்று விருந்தளித்து, பரிசுகள் தந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களைப் பார்வையிட அனுமதித்ததன் நோக்கம் என்ன?
முகாம்களில் உள்ள மக்களை உடனே விடுவிக்காவிட்டால் இலங்கைக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என பிரிட்டன் உள்பட பல நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் அந்நாடுகளிடம் காட்டுவதற்கு இராசபக்சேவுக்கு ஒரு நற்சான்றிதழ் தேவை. அதை வழங்கு வதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர்தான் கருணாநிதி ஆவார்.
இராசபக்சே விரும்பியதும் எதிர்பார்த்ததும் நடந்தது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிங்கள அரசு அழைத்துச் சென்ற இடங் களுக்கு மட்டுமே சென்றார்கள். அவர்கள் காட்டியவற்றை மட்டுமே கண்டார்கள். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவேண்டும் என ஒருபோதும் கேட்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவை வரவேற்றது இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஆவார். இவர் யார்? இவருடைய பின்னணி என்ன? 1987ஆம் ஆண்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பின் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா, சென்னை சூளைமேட்டில் குடியிருந்தார். அந்தத் தெருவில் இருந்த மக்களுடன் இக்குழு வினருக்கு சச்சரவு மூண்டது. இதன் விளைவாக ஆத்திரம் அடைந்த டக்ளஸ் தேவானந்தா இயந்திரத் துப்பாக்கியை எடுத்துக் கூட்டத்தினரைச் சுட்டார். இதன் விளைவாக திருநாவுக்கரசு என்னும் உள்ளூர்த் தமிழர் துடிதுடித்து இறந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இதன் விளைவாக அவரும் மேலும் 10 பேரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு பிணை விடு தலை பெற்று வெளியே சென்ற இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் மீது போடப்பட்ட கொலை வழக்கு இன்னமும் தமிழக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேடப்படும் குற்றவாளியாக இவரை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டுத் தமிழரைப் பதை பதைக்கச் சுட்டுக்கொன்ற டக்ளஸ் தேவானந்தா தமிழகத்திலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கை குலுக்கி வரவேற்று அழைத்துச் சென்றிருக்கிறார். எங்கள் தமிழனைக் கொலை செய்த ஒருவருடன் நாங்கள் செல்ல மாட்டோம் என்று மறுக்கும் துணிவு இக்குழுவினர் யாரிடமும் இல்லை.
இக்குழுவினர் சென்ற இடமெல்லாம், மக்கள் அவர்களிடம் எவ்வாறு தங்களுடைய குமுறல்களையெல்லாம் கொட்டியழுதார்கள் என்பதைக் குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய நாளேடுகள் பக்கம் பக்கமாகச் செய்தி களை வெளியிட்டு அம்பலப்படுத்தி யுள்ளன. மலையகப் பகுதிக்கு இந்தக் குழுவினரின் வருகை ஏமாற்றத்தையே அளித்தது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையகத் தமிழர்களின் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் கொழும்பு வீரகேசரி நாளேட்டிற்கு அளித்த நேர்காணலில் 'சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டே இலங்கையில் அகதி முகாம் கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்களின் பாதுகாப்பிற்காகவே முட் கம்பிகள் போடப்பட்டுள்ளன' என்று கூறியிருக்கிறார். இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் இலங்கை செய்தியாளர்களிடம் பேசும் போது 'இந்திய ஊடகங்களில் தெரிவிப்ப தனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை' என்றும் கூறியிருக்கிறார்.
இந்தக் குழுவினர் இலங்கை அதிபர் இராசபக்சே, அவருடைய சகோதரர்கள் பசில் இராசபக்சே, கோத்தபாயா இராசபக்சே ஆகியோரைச் சந்தித்து அளவளாவியுள்ளனர் இராச பக்சேவுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் தந்தும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவரும் இவர்களின் விசுவாசத்தை மெச்சிப் பரிசுகள் தந்து மகிழ்வித்திருக்கிறார்.
இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் இரத்தக் கறை படிந்துள்ள இராசபக்சேவின் கரங்களை தமிழர்களே குலுக்கி மகிழ்ந்த அவலம் வரலாறு காணாததாகும்.
இக்குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே 22-9-09ல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி பின்வருமாறு அறிவித்ததை இப்பொழுது நினைவு கூர விரும்புகிறேன்:
'இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன. தமிழக அரசும் இந்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்துள்ளனர்'' - என நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிகாட்டியுள்ள முதல்வர் 'இவையெல்லாம் திருப்தியளிக் கின்றன' எனக் கூறியுள்ளார்.
20 நாட்களுக்கு முன்னால், முதலமைச்சர் இவ்வாறு அறிவித்த பிறகு இலங்கைக்கு அவரால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவினர் இந்த அறிவிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்திருக்கிறார்கள்.
இக்குழுவினர் சென்னை திரும்பியதும் முதலமைச்சர் கருணாநிதி மூலம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்கள்:
'முள்வேலி முகாம்களில் இருக்கிற மக்களின் துன்பங்கள் குறித்து அதிபர் இராசபக்சேயை நாங்கள் சந்தித்த போது அவரிடம் தொகுத்துக் கூறியுள்ளோம். இதனை மனிதாபிமான உணர்வோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.
முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன் வைத்தோம். மொத்தத்தில் முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இன்னும் இரண்டு வார காலத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.'
இந்த அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களிடம் அறிவித்ததில் முக்கியமானவை பின்வருமாறு:
1. 15-10-09 முதல் 15 நாட்களில் 58 ஆயிரம் மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
2. அநாதைக் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள்.
3. இந்திய அரசு மேலும் உதவினால் நிலக்கண்ணிவெடிகள் விரைவில் அகற்றப்படும்.
4. முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் யாரும் கடத்தப் படுவதில்லை.கொலைசெய்யப்படுவதும் இல்லை.
5. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து. இலங்கை அரசுக்கு விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துன்ப நிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பு இந்தியாவிலிருந்தும் கிடைக்கவேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பட்டியலிடாத ஒரு சாதனையை குழுவின் தலைவர் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் 'இலங்கையும்-தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில்-வணிகம் பெருகவும் தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும்' என்று கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களப் படையினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியிருப்பதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது வணிகத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கையோடு தொழில் வணிகத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை முதலமைச்சரின் குழு ஆராய்ந்து கூறியுள்ள வெட்கக்கேடு நிகழ்ந்துள்ளது.
தான் அனுப்பிய தூதுக்குழுவினர் இராசபக்சேயிடமிருந்து பெற்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டிருக்கிறார் முதலமைச்சர். ஆனால் அவருடைய அறிவிப்பை மாபெரும் சாதனையாகச் சித்திரித்து சுவரொட்டிகள் அச்சடித்து தி.மு.க.வினர் சென்னையெங்கும் ஒட்டியுள்ளனர். சுவரொட்டியில் உள்ள பசை உலர்வதற்கு முன்னாலேயே முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பப்பட்ட 2,500 தமிழர்கள் நடுவழியில் மறிக்கப்பட்டு மற்றொரு முகாமில் அடைக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. செப்டம்பர் 15ஆம் தேதியன்று வவுனியா முகாம்களிலிருந்து 2000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இப்போது வேறு எங்கோ சிறைவைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 11ஆம் தேதியன்று யாழ்ப்பாணம் முகாமில் இருந்து 568 தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 1706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கேயோ தடுத்துக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவரங்களை மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.
இலங்கை அமைச்சரவைப் பேச்சாளரும் அந்நாட்டுச் செய்தித்துறை அமைச்சருமான அனுரா பிரியதர்ஷன் யாப்பா என்பவர் ''முகாமில் உள்ள தமிழர்களில் 58ஆயிரம் பேர் முதல் கட்டமாக இரண்டு வார காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள்' என தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது குறித்து எதுவும் தெரியாது'' என்று கூறி அச்செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.
நிலக்கண்ணிவெடிகளை விரைவில் அப்புறப்படுத்த இந்திய அரசு மேலும் உதவினால் ஒழிய அந்த வேலை சீக்கிரத்தில் முடியாது என இராசபக்சே கூறியுள்ளார். கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த ஐ.நா.வின் உதவியை நாடுவதற்கு அவர் தயாராக இல்லை. ஐ.நா. முன்வந்தால் பல்வேறு நாடுகளின் உதவியுடன் இக்கண்ணிவெடிகள் சில நாட்களிலேயே அப்புறப்படுத்தபட்டுவிடும். அவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டால் அகதிகளை விடுதலை செய்யவேண்டி வரும். அவ்வாறு செய்யாமல் காலம் கடத்துவதற்காகவே தனது போர்க் கூட்டாளியான இந்தியா உதவவேண்டுமென்று அவர் போக்குக் காட்டுகிறார். நிலக் கண்ணிவெடிகள் மக்கள் வாழ்விடங்களில் உண்மையில் உள்ளதா என்பதே கேள்விக்குரியது.
தமிழக மீனவர்கள் துன்ப நிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என முதலமைச்சர் கூறிய இருநாட்களிலேயே அதாவது அக்டோபர் 18ஆம் தேதியன்று இராமேசுவரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி அவர்களின் மீன் பிடி வலைகளை அறுத்தெறிந்து படகு களையும் சேதப்படுத்தி விரட்டியடித்த செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை சென்ற தூதுக்குழு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ள 12,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் குறித்து எதுவும் விசாரித்தறியவில்லை என்பது அதிர்ச்சி தருகிறது. புலிகள் எனக் குற்றம் சாட்டி இவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஐ.நா.விற்கான இலங்கைத் தூதுவர் பாலித்த கோஹன்னா என்பவர் அக்டோபர் 15ஆம் தேதி பின்வருமாறு கொழும்பில் அறிவித்தார்:
'தனி முகாம்களில் உள்ள 12,500 பேர் புலிகளாவார். மேலும் மற்ற முகாம்களில் 10,000 புலிகள் இருக்கக்கூடும். இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அழிப்பதே எங்கள் நோக்கம்' என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான டேவிட் மிலிபண்ட் பின்வருமாறு கூறியுள்ளார்:
'இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் 12,500 பேரை விடுதலைப்புலிகள் என்று கூறி தனி முகாம்களில் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது. இராணுவம் ஆய்வு நடத்திய முறை வெளிப்படையாக இல்லை என்பதால் இவர்கள் உண்மையிலேயே விடுதலைப்புலிகளா என்ற அய்யம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களைச் சந்திக்க ஐ.நா. அமைப்புக்கோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கோ இன்று வரை அனுமதியளிக்கப்படவில்லை என்பதும் கவலையளிக்கிறது.' என்று கூறியுள்ளார்.
உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த முகாமை தமிழகத் தூதுக்குழு எட்டிப் பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல. அது பற்றிய உண்மையைக் கூட விசாரித்தறிய முற்படவில்லை. எங்கேயோ பிரிட்டனில் இருக்கக்கூடிய வெளிவுயறவுத்துறை அமைச்சர் அந்த இளைஞர்களைக் குறித்துக் கவலைப்படுகிறார். ஆனால் இலங்கைக்கே சென்ற தூதுக் குழுவினர் இதைப் பற்றிக் கொஞ்சமும் கவலையோ பொறுப்புணர்வோ இல்லாமல் நடந்து கொண்டுள்ளனர்.
இராசபக்சேயின் சகோதரரும் பாதுகாப்புத் துறை ஆலோசகருமான பசில் இராசபக்சே பின்வருமாறு கூறியதை நாம் மறந்துவிடமுடியாது.
'பாலஸ்தீனத்தில் அகதிகளை மறுகுடியமைக்க 70 ஆண்டுகளும், வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அகதிகளை மீள் குடியமர்த்த 10 ஆண்டுகளும் பிடித்தன.' (எக்ஸ்பிரஸ் 7-4-09).
இவ்வாறு அவர் கூறியதன் நோக்கம் வெளிப்படையானது. முகாமில் வாடும் மக்களை மீண்டும் அவரவர் ஊர்களில் குடியமர்த்த நீண்ட காலம் ஆகும் என்பதையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து சென்ற குழுவினர் முகாம்களில் உள்ள மக்கள் மாற்று உடை இல்லாமலும் ஒரே அழுக் கேறிய உடையை பல நாட்களாக அணிந்திருப்பதும் தெரியவந்தது என்று கூறியுள்ளார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் முகாம்களில் உள்ள மக்களுக்காக வேட்டிகள், சேலைகள் மற்ற துணிகள் தனித் தனியாக பொட்டலம் கட்டப்பட்டு அனுப்பப்பட்டனவே. அவைகள் எல்லாம் என்ன ஆயின என்பதை இந்தக் குழுவினர் விசாரித்திருக்க வேண்டும். தமிழக அரசு அனுப்பிய உதவிப் பொருட்கள் கிடைத்ததா என்றும் கேட்டிருக்க வேண்டிய கடமை இவர்களுக்கு உண்டு. அதைக்கூட இவர்கள் கேட்கவில்லை. முகாமில் உள்ள மக்கள்தான் இராணுவ கெடுபிடிக்கு அஞ்சி வாயைத் திறக்கவில்லை என்றால் இந்தத் தூதுக் குழுவினரும் மூடிய வாயைத் திறக்கக் கூட அஞ்சியிருக்கிறார்கள் என்பது தெளிவு. இந்நிலையில் இலங்கைக்கு மேலும் 500 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருக்கிறார்.
முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும் அங்ககீனமாகியும் உள்ளனர். இயலாத முதியவர்களும் குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து இக்குழுவினர் விசாரித்து அறிந்ததாகத் தெரியவில்லை.
குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் பிரித்து அடைக்கப் பட்டுள்ளவர்களை ஒன்றாக வைக்க வேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை.
கடற்கரை மாவட்டங்களில் வாழும் மக்கள் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவேண்டும் என இக்குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.
முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் இருக்கிறதா என்று கேட்டு அதைப் பார்வையிட்டு சிலரையாவது அழைத்துப் பேசி உண்மை அறிந்தார்களா என்பதற்கும் சான்று இல்லை. போரின் கடைசிக் கட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரப் பட்டியலை குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.
இந்தியா உட்பட உலக நாடுகள் அளித்த உதவி முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து விசாரித்து அறியவோ அல்லது அதைக் கண்காணிக்க சர்வதேசக் குழு ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தவோ இக்குழுவினர் எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.
தமிழகக் குழுவின் பயணம் இராசபக்சேவுக்கு சாதகமான அறிக்கை அளிப்பதற்காகவே சென்றுள்ளது என்ற சந்தேகம் வலுப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே தனக்கு நற்சான்றிதழ் அளித்துவிட்டார்கள் என அவரைக் குறைசொல்லும் நாடுகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும் கூற இந்த அறிக்கை இராசபக்சேயால் பயன்படுத்தப்படுமே தவிர முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் போக்குவதற்கு எள் முனை அளவு கூட உதவாது.
போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளி வாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட இலட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற இந்திய அரசு தவறிவிட்டது. இங்கிருந்து கப்பல்களை அனுப்பி அந்த மக்களைப் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். 1983ஆம் ஆண்டு சூலை மாதத்தில் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலை தாண்டவமாடியபோது இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இரண்டு கப்பல்களை அனுப்பி கொழும்பு நகரில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தில் கொண்டு சேர்க்க உதவினார். ஆனால் மன் மோகன் சிங் அரசு அந்த மனிதநேய கடமையைக்கூடச் செய்யத் தவறி விட்டது. இந்த மாபெரும் தவறை மூடி மறைக்க அவருக்கும் கருணாநிதியின் இந்த நற்சான்றிதழ் உதவும்.
இராசபக்சேயைப் போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என உலக நாடுகளின் குரல் வலுத்துவரும் இந்த வேளையில் அவரைச் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி பரிசுகள் தந்து மகிழ்ந்த இக் குழுவினரை என்னென்று சொல்வது?
1936ஆம் ஆண்டில் இத்தாலியின் சர்வாதிகாரியாக முசோலினி திகழ்ந்த போது காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவகர்லால் நேரு சுவிட்சர்லாந்தில் தனது மனைவி கமலாவின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தார். கமலா அங்கேயே காலமானார். இச்செய்தியை அறிந்த முசோலினி சுவிட்சர்லாந்தில் இருந்த இத்தாலியத் தூதர் மூலம் நேருவிற்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அத்துடன் தனது விருந்தினராக ரோம் வந்து தங்கும்படியும் அவருடன் பேச விரும்புவதாகவும் செய்தியனுப்பினார். ஆனால் ஜவகர்லால் நேரு இந்த அழைப்பை ஏற்க மறுத்தார். ஆப் பிரிக்காவில் உள்ள அபிசீனியா மீது படையெடுத்து நச்சு வாயு குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரு பாசிச சர்வாதி காரியான முசோலினியின் இரத்தக்கறை படிந்த கரங்களால் அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்க மறுக்கிற துணிவு ஜவகர்லால் நேருவுக்கு இருந்தது. அபிசீனிய மக்களோடு எத்தகைய இரத்தத் தொடர்பும் நேருவுக்கு இல்லை. ஆனாலும் அவரிடம் இருந்த மனிதநேய உணர்வு அவரை இவ்வாறு செய்ய வைத்தது. ஆனால் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத்தமிழர்களின் இரத்தத்தால் நனைந்து கறைபடிந் திருக்கிற இராசபக்சேயின் கரங்களைக் குலுக்கி நட்புப் பாராட்ட தன் மகள் உட்பட தமிழர்களைக் கொண்ட குழுவையே அனுப்பி உறவு கொண்டாடிய கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது?
நன்றி: தென்செய்தி.com
பகுப்புகள் இன அழிவு, இலங்கை, கலைஞர், தமிழீழம், பழ.நெடுமாறன்
சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாத தாகும். ஏனெனில், எது எது சமரச சன்மார்க்கம் என்கின்றோமோ, எது எது உண்மையான - இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர்விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப் பட்டிருக்கின்றது. இது நமது நாட்டில் மட்டு மல்ல, உலக முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப் போயிற்று. ஆனால், நமது நாட்டில் மற்ற நாடுகளை விட வெகுதூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது.
முதலாவது, கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்குப் பாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல், நியாயப் பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப்பற்றிப் பேச வேண்டுமானால், மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேச முடியாது. ஏனெனில், அவை ஒன்றுக் கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப் பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.
ஆகையால், நான் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால், அவைகள் சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான் சமரச சன்மார்க்கம் என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. இது உங்களில் பலருக்கும், உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம் பக்க சாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகின்றேன். நான், உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமூகத்தார், அடைந்த தனி மனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்துதான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள் - அடைகின்றார்கள் - அடைய முயற்சிக்கின்றார்கள். இவைகளில் சிறிது தாட்சண்யப் பட்டவர்கள் கூட தோல்வியே அடைந்துவிட்டார்கள்.
உதாரணமாக, கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் ருசியர்கள், பாதிரிமார்கள் தொல்லையையும், சர்ச்சுகளையும், பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருசிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகள் என்றே தீர்மானிக்கப் பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்றுவிட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை அதாவது, சமரசத்திற்கு எதிர்ப்பிரசாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர, மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்கப் போட்டார்கள்; அதுபோலவே, சர்ச்சுகளை தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாமல் போக்குவரவுக்கும், மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள். பணக்காரர்கள் சொத்தைப் பிடுங்கி, பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்களுக்குப் பூமி, தொழில் இல்லாதவர்களுக்குத் தொழில், படிப்பில்லாதவர்களுக்கு படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப் படுத்தினார்கள். கல்யாண முறையை ஒழித்து பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச் செய்து, அளவுப்படுத்தி ஆண் பெண் வாழ்க்கை இன்பத்திற்கு சவுகரியம் செய்தார்கள்; இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.
ஆனால், நமக்கு இவை பொருந்துமா? என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்கள் என்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100-க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். மற்றவர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்ட வர்களாவார்கள். ஆதலால், குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள் அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்? முதலாவது, உங்களைக் கேட்கின்றேன். நீங்கள் இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றீர்களா? என்ன சொல்லுகின்றீர்கள்? (சிரிப்பு) ஆகவே, இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், நமக்கு இன்றே அம்மூன்றும் ஒழியவேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றன. ஆகையால், வரிசைக்கிரமத்தில் அந்த முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாத தான ஜாதி உயர்வு-தாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன் மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்ம சாத்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை.
சகோதரர்களே!
நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்தி ரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். என்ன பலன் அடைந்து இருக்கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுட்காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுகின்றீர்களா? இன்றைய நிலைமையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளைய தினம் வரையில்கூட உயிருடன் இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ இருக்கவேண்டும்.
சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் வெறும் ஆகாரம் உட் கொள்ளவும், உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன உணர்ச்சியும், ஞானமுமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதே. இது போதாதா? இனி, மனிதன் என்றும், ஆறறிவு - பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும், கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும், நேரத்தையும் ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும் நல்ல ஆகாரவஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழவேண்டுமா? என்று கேட்கின்றேன். இதைப் போன்ற அறிவீனமும், அவமானமுமான காரியம் மனித சமூகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்ணியத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமான தென்று தோன்றுகின்றது.
ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டைக் கற்பித்திருக்கின்றார்கள். முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒரு மயிர்த் துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருக்கின்றதா? ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது? அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி, உங்கள் கஷ்டத்தை நிலைநிறுத்தி, உங்கள் சந்ததிகளுக்கு விட்டுவிட்டுச் சாகாதீர்கள். உணர்ச்சியும், அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத் தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?
கடவுளுக்கு இடம் கொடுத்து கோயில் கட்டி, உறுப்படிகளை அதிகமாக்கி, நமது குறைகளையும், கஷ்டங்களையும் முறையிட்டு அழுது வந்தது போதும் என்றே சொல்லுகிறேன். இனி, அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள், உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்; அதை மதியுங்கள்; அதனிடம் நம்பிக்கை வையுங்கள்; அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும் - “கடவுளை”ப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும், வளர்ச்சியும், மற்ற நாட்டு வர்த்தமானங்களும், உங்கள் நடுநிலைமையுமேயாகும். ஆகையால், மற்ற நாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்!! விடுதலை!!! இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
(26-1-1931 அன்று ஈரோடு தாலுகாவை அடுத்த கிரே நகரில் நடந்த ஆதித் திராவிடரின் ஆண்டு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி, 8-2-1931 “குடி அரசு” இதழில் வெளியானது)
பகுப்புகள் இந்து, கடவுள், கொள்கைகள், சிந்தனைகள், பெரியார்
+copier.jpg)




